Saran Raj's 2020 Hero

Saran Raj says: "முன்னர் மருத்துவ வசதி இல்லாத காலத்தில் கற்பினிப் பெண்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களே பிரசவம் பார்த்து கொள்வார்கள். எங்கள் ஊரில் 'நரச்சா பேச்சி' பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவராவாள். இவளுடைய மகள் ஆண்டிச்சியும் சிறுவயதிலிருந்தே தன் அம்மாவுடன் இருந்து பிரசவம் பார்க்கக் கற்றுக்கொண்டு, பின்னர் ஊரில் பலருக்கு பிரசவம் பார்த்திருக்கிறாள். அந்த குழந்தைகளுக்கு இன்று திருமணமாகிவிட்டது. அவர்கள் தன் குழந்தைகள் பிரசவத்திற்கு இன்று மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனாலும் அங்கும் உதவிக்காக இந்த ஆண்டிச்சிதான் முதல் ஆளாக நிற்பாள். அங்கு உதவிக்கு சென்ற இவரே, பல சமயம் பிரசவம் பார்த்திருக்கிறாள். மருத்துவர்கள், இவரின் பிரசவம் பார்க்கும் பக்குவத்தை கண்டு பாராட்டியதாக ஆண்டிச்சி பெருமையாக எண்ணிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறாள். இதற்கு பணம் எதுவும் கேட்டுப் பெற்றதில்லை. விருப்பப்பட்டு தருவதை வாங்கிக்கொள்வாள். அவர் அதை பெருமையாக கருதி, அந்த நொடி தன்னை ஒரு மருத்துவராகவே பாவித்து மகிழ்கிறாள். மற்ற நாட்களில் கிடைக்கின்ற கூலி வேலைக்குச் செல்வாள்.
இவையெல்லாம் வைத்து இவள் இளகிய தன்மையுடையவளோ என்று எண்ண வேண்டாம். ஊரிலேயே மிகவும் துணிச்சலான பெண்மணி என்றால் அது ஆண்டிச்சி தான். சண்டை என்றால் போதும் தெருவில் இறங்கி சேலையை வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, அந்த தெருவையே அலற விடுவாள். சாராயம் முதல் டாஸ்மாக் சரக்கு வரை அத்தனையும் தன் கனவருடன் சேர்ந்து தரம் பார்த்தவள். சரக்கு அடிக்கும் வரைதான் கனவன். அடித்த பிறகு அந்த பதவி கண்டதுண்டமாகிவிடும். இதை பார்ப்பவர்கள் "இவள் கிட்ட வச்சுக்கக்கூடாது' என்று எண்ணுமளவிற்கு இது ஒரு முகம். இன்னொரு முகம் அப்படியே நேர் எதிர். கனவருடன் இரவு அவ்வளவு பெரிய கலவரத்த பண்ணிட்டு, அதிகாலையில் எதுவுமே நடக்காதது போல பார்சல் 'டி'யை வாங்கி வந்து டம்ளரில் ஊற்றி, "இந்தா டி யை குடி" என சொல்லி எழுப்பி விடுவாள். சண்டைக்காரரானாலும் அதைப் பற்றியும் யோசிக்காமல் பிரசவம் பார்க்க அந்த வீட்டில் இருப்பாள். இதுதான் அவளுடைய அடையாளம். எங்கள் ஆண்டிச்சி'ன் அடையாளம். இவரே கிராமங்களின் அடையாம். தன் கனவர் இறந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் அந்த பிரிவை தாங்க முடியாத அந்த மனுசி. தன் உடலை விட்டு பிரிந்து சென்றாள்.
இவரின் இறுதி சடங்கில் கடைசியாக ஒருமுறை முகத்தை கூடப் பார்க்கமுடியாத தொலைதூரத்தில் இருந்துவிட்டேன். 2020 மே மாதத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்த இந்த புகைப்படம் இன்று பொக்கிஷமாக தெரிகிறது."